Showing posts with label புகார். Show all posts
Showing posts with label புகார். Show all posts

Monday, February 11, 2008

11.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 2

முத முதல்ல நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பை அணுகிய அனுபவமாதலால் சுய புராணம் கொஞ்சம் நீளமா இருக்கும். பொறுதருள்க.

1998ல் நான் வெளிநாடு போக வேண்டியிருந்தது. கம்பித் தொலைபேசி(landline) இணைப்பைத் தொலைத் தொடர்புத் துறையிடம் (அப்போது அது BSNL ஆக மாறியிருந்ததா என்று நினைவில்லை) சொல்லி துண்டிக்கச் சொல்ல வேண்டும், மாதா மாதம் தொலைபேசிக்கான வாடக்கைக் கட்டணம், திரும்ப வரும்வரை கட்ட வேண்டாமென்றால். நல்ல வேளையாக வீட்டுச் சொந்தக்காரர், தொலைபேசி இணைப்பை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும்படியும், தான் அதை உபயோகப்படுத்தி விட்டு, தானே அதற்க்கான கட்டணத்தை தொலைதொடர்பு துறையிடம் அவ்வப்போது கட்டி விடுவதாகச் சொன்னார். இதுவும் நல்லதாகப் பட்டபடியால், அப்படியே செய்தேன். வேலையை முடித்துக்கொண்டு திரும்பியவுடன் தான் தெரிந்தது. வீட்டுச்சொந்தக்காரர் கடைசி 4,5 மாதங்களுக்கு தொலைபேசி கட்டணத்தைக் கட்டாததால் இணைப்பு ஏற்க்கனவே துண்டிக்கப்பட்டு விட்டது என்று. பின், தொலைத் தொடர்புத் துறைக்குச் சென்று கட்ட வேண்டிய நிலுவைத் தொகைகளையெல்லாம் கட்டிவிட்டு மறுபடி இணைப்பு கிடைக்கக் காத்திருந்தேன். 2 மாதங்கள் ஆயிற்று. இணைப்பு மறுபடியும் கிடைத்தபாடில்லை. அதைப் பற்றிய எந்தக் கடிதமும் அவர்களிடமிருந்து கிடைத்த பாடில்லை.

தொலைத்தொடர்புத் துறைக்குச் நேரடியாகச் சென்றேன். அக்கௌண்ட்ஸ் துறைக்குச் சென்றால், கமர்ஷியல் துறைக்கும், அங்கு சென்றால் அக்கௌண்ட்ஸ் துறைக்கும், மாற்றி மாற்றி அலைக்கழித்தார்கள். இப்படியே நாலைந்து மாதங்கள் ஆய்விட்டன. 5,6 முறை அங்கு போன பின் புரிந்தது, நான் நிலுவைத்தொகையைக் கட்டியபின், அந்த விபரங்கள் கணிணியில்(database) அவர்களால் பதியப்படவில்லை என்று. கடைசியாக அவர்கள் அதையும் செய்த பின், இணைப்பு மீண்டும் கிடைத்தது. இப்போது சுமார் 1 வருடம் ஓடிவிட்டது.

மனசுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு தடவை அலைந்தது, இணைப்புக் கிடைக்காமல் போனது, இணைப்பு இல்லா சமயங்களிலும் அதற்க்கான கட்டணத்தைக் கட்டியது எல்லாம்.

செய்தித்தாளில் அவ்வப்போது நுகர்வோர் குறைம் தீர்க்கும் அமைப்பைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு வழியாக அதன் முகவரியைக் கண்டுபிடித்து, நடந்ததை தெளிவாக, புகாராக, எழுதி அனுப்பியவுடன், புகார் கிடைத்ததற்க்கான கடிதமும், அவ்வழக்கு இன்ன தேதியில் விசாரணக்கு வருமென்றும், அதற்க்கு நேரில் வரவேண்டுமென்ற விவரங்களும் அதில் இருந்தன.

சொன்ன தேதியில் அங்கு சென்றேன். நான் அப்போதுதான் மூச்சிரைக்க (7 மாடி என்று நினைவு) மாடி ஏறி, வழக்கு நடக்கும் அறை வாசலில் நின்றேன். அப்போதுதான் என் பெயர் அழைக்கப்பட்ட்டது. என் பெயரை சொல்லி , என்னுடைய வழக்கா என்று கேட்பதற்க்காக என் கையைத் தூக்கினேன். என் பெயரை அழைத்தவர் "நீங்கள்தான் ....."என்று கேட்க , நான் ஆமென சொல்லி உள்ளே நுழைந்தேன்.

இது வரை படங்களில் மட்டுமே பார்த்த கோர்ட்டு இருந்தது. சுமார் 1அடி உயர மேடை. அதில் பெரிய மேசை. அதன் பின் 3 நீதிபதிகள், அதில் 2 ஆண்கள், 1 பெண் உக்கார்ந்து இருந்தனர். ஆனால், சினிமாவில் வரும் கோர்ட்டில் உள்ளதுபோல் நீதிபதியெல்லாம் கறுப்பு கோட்டு எல்லாம் அணிந்திருக்கவில்லை. சாதாரண சிவிலியன் உடையில்தான் இருந்தனர். வக்கீல் யாரும் இருந்ததாக நினைவில்லை. மற்ற வழக்காடிகள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். குற்றவாளி கூண்டு எல்லாம் இருக்கவில்லை. அந்த அறை, பள்ளி/கல்லூரி வகுப்பறை மாதிரி இருந்தது. அதன்பின் அந்தப்பெண் நீதிபதி , என்ன விஷயம்(புகார்) என்றார். என் புகாரில் சொல்லியிருந்ததைச் சொல்லி, இந்த மாதிரி, தொலைத்தொடர்புத் துறையின் கவனக் குறைவால், எனக்குக் காலதாமதம் ஏற்ப்பட்டதையும், அபராதக்கட்டணம் கட்ட வேண்டியதையும் சொன்னென். அவர்கள் மூவரும் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டனர். பின், அப்பெண் நீதிபதியிடம், நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அவர் "நீங்கள் போகலாம். நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார். சில மாதங்களில் நான் கட்டிய அதிகப்படியான தொகைக்கு ஈடான கிரெடிட் கடிதம் தொலைத் தொடர்புத் துறையிலிருந்து வந்ததது. பின் வரும் மாதங்களில் அப்பணம் அந்தந்த மாத கட்டணங்களில் சரி செய்யப்படும் என்று.

பின் நான் மறுபடியும் குறை தீர்வு மன்றத்திற்க்கு கடிதம் எழுதினேன், எனக்கு நட்ட ஈடு வேண்டுமென. அக்கடிதத்திற்க்கு, தொலைத் தொடர்புத் துறையிலிருந்து கடிதம் வந்தது. நான் சொல்வதற்க்கு(தாமதமானதற்க்கு) எந்த ஆதாரமும் இல்லையென்றும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்.

என்னிடம் அதற்க்கான ஆதாரம்(ஓவ்வொரு முறை தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் கொடுத்த புகாருக்கென அத்தாட்சி) இல்லை என்பதாலும், இதற்க்குமேல் பிரச்னையை வளர்த்துக்கொண்டு போவதால் உபயோகம் இல்லை என்று பட்டதாலும், வழக்கை முடித்துக்கொளவதாக குறை தீர்ப்பு ஆணையகத்துக்கு கடிதம் எழுதினேன்.

Thursday, January 31, 2008

01.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 1

நாம என்ன பொருள்/சேவையை வாங்கினாலும் அதிலுள்ள குறையச் சம்மத்தப்பட்டவர்களிடம் சொல்லி நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அரசு சேவை மட்டுமல்ல தனியார் சேவையும் அதே லட்சணத்தில்தான் இருக்கு.
"என்னத்த சொல்லி என்ன பண்ண? நாம சொல்லி நடக்கவா போகுது?"ன்னு நம்ம எல்லோருக்கும் ஒரே அங்கலாய்ப்புதான். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தால் புகாரே வரவில்லை" என்று வழக்கமான பதில் கிடைக்கும். என்னமோ புகார் வந்தால் அதை தீர்த்துவிட்டுத்தான் மறுவேலைபார்ப்பது மாதிரி.

சமீபத்தில் படித்த செய்தி. வங்கி சம்பந்தமான 'வங்கி மத்தியஸ்த தீர்ப்பாயத்துக்கு' வந்த புகார்களில் ஆயிரம் உபயோகிப்பாளர்க்கு 0.01க்கும் குறைவாம். அதாவது, லட்சத்தில் ஒருவர்தான் புகாரே பண்ராராம். ஒரே ஒரு மேல்நாட்டு வங்கியில் மட்டும் 1000க்கு 25 பேராம். ஏனெனில்,புகார் செய்தவர்கள் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்யும் HNI(High Networth Individuals)க்கள்.

சமீபத்தில் ரயிலில் வந்தபோது உடன் வந்தவர் ஒன்று சொன்னார். அவர் ரயில் ஒரு நிலையத்தில் நின்றபோது, கட்டணக் கழிப்பிடத்திற்க்குச் சென்றிருக்கிரார். அங்கிருப்பவர் கட்டணமாக ரூ.2 கேட்டிருக்கிறார். உடனே நம்மாள் திரும்பி வந்துட்டார். இதே மாதிரி, எனக்கு பெங்களூரில் நடந்தபோது அங்குள்ள புகார் புத்தகத்தில் புகாராக இதை எழுதிவிட்டு வந்தேன். ரயில்வேயிலிருந்து புகார் கிடைக்க்ப்பெற்ற அத்தாட்சிக் கடிதம் எனக்குச் சில தினங்களில் கிடைத்தது. அதற்க்கப்புரம், அதே மாதிரி ரயிலில் போகும் சந்தர்ப்பமோ, அங்கு கழிப்பிடத்தை உபயோகப்படுத்தும் வாய்போ அமையவில்லை.

பல வருடங்களுக்கு முன் (தமிழ்நாட்டு) ஒரு கோவிலில் செருப்பை அதற்க்கான பாதுகாப்பகத்தில் விட்டேன். அங்கிருப்பவர் அதற்க்குக் கட்டணமாக 50 பைசா கேட்டார். அப்போதெல்லாம் அதற்க்கு 25 பைசா தான். நான் தயங்கியவாரே 50 பைசாவை அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். அப்போது கண்ணில் பட்டது அந்த அறிவிப்புப் பலகை "செருப்புக்குக் கட்டணம் 25 பைசா". உடனே, செருப்புக்காப்பாளரிடம் அதைக்காட்டி "ஏன் அதிகம் வாங்குகிறீர்கள்" என்று கேட்டேன். அவர் "நிரம்பப் பணம் போட்டு குத்தகை எடுத்துள்ளோம். அதனால் 50 பைசாதான் " என்றார். இருந்தாலும் மனசு கேக்கலை. அங்குள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் இது சம்பந்தமாக விசாரிக்கச் சென்றேன். இதற்க்காவே காத்திருந்தவர்போல, அங்குள்ள அதிகாரி "ஆமாம் சார் 25 பைசாதான். ஆனால், குத்தகைதாரர் அதிகமாத்தான் வசூலிக்கிறார். அதனாலதான் நாங்களே(அறநிலையத் துறை) அதை எடுத்து நடத்தலாம்னு இருக்கோம். அதுக்கு குறைந்தது 20 (எழுத்துப்பூர்வமான) புகார்கள் தேவை. அந்தப் புகார்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, நாங்களே அதை நடத்துவதற்க்கு அனுமதி பெறணும். இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. நீங்களும் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்" என்றார். பின் அவ்வாறே செய்தேன். நான் அவ்வூரிலோ, அருகிலோ குடியிருந்து இருந்தால், மீதி 10 புகார் கடிதங்களையும் மற்றவர்களிடமிருந்து நானே பெற்றிருப்பேன்!

டோண்டு அவர்கள் தன் பதிவில் தான் மும்பையிலிருக்கும்போது தவறாகக் காட்டிய போக்குவரத்து சிக்னலை, புகாராகத் தெரிவித்ததாகவும், மறுநாளே அது சரி செய்யப்பட்டதாகவும் சொல்லியிருந்தார்.

சரி சரி,முன்னுரை போதும்,விஷயத்துக்கு வா என்கிறீர்களா. இதோ வந்துட்டேன்.

இதுவரை 5 விடயங்களில் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயம் போன்றவற்றில் புகார் செய்து, இறையருளால், அக்குறைகள் நிவர்த்தியாகியுள்ளன. ஒரு முறை கடைக்காரரிடம் சுமார் 15 நிமிடம் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் பற்றி பேசியே, குறைகள் நிவர்த்தியாயுள்ளன. அதில் ஒவ்வொன்றாகப் பார்போம்.